Sunday, April 25, 2021

தமிழ்ச்சரம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்- April 25, 2021

தேர்ந்தெடுத்த படைப்புகள்:

 


 

உலகம் யாவையும், 2021 ஏப்ரல், 14,  கவிதை ஒரு கைவல்லியம்

Rammalar’s Weblog, 2021 ஏப்ரல், 13, நெய்தல் நிலக்காரி – கவிதை

நாகேந்திர பாரதி, 2021 ஏப்ரல், 10, அழுக்கின் அழுக்கு - கவிதை

மின்னற் பொழுதே தூரம்,2021 ஏப்ரல், 14, சாதியை ஒழிக்கும் ஒரு கனவுத் திட்டம்

சிறகை விரிக்கும் சிந்தனைகள், 2021 ஏப்ரல், 14 , மண்டேலா

அக்னிச் சிறகு.... (வைசாலி செல்வம்), 2021 ஏப்ரல், 14, வாசிப்பது எப்படி ....?

சுருதி, 2021 ஏப்ரல், 12, வாசிப்பு  

தயாஜி வெள்ளைரோஜா, 2021 ஏப்ரல், 12, புத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்

ஏன் தேர்ந்தேடுத்தேன் ?  -தமிழ்த்தேசன் இமயக்காப்பியன் 


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம். இப் படைப்புகள் அனைத்தும் ஒரு படைப்பாளனின் மனிதம் எவ்வாறு இருக்கிறது, இருக்க வேண்டும் என அழுத்தமாகச் சொல்கின்றன.

*கவிதை என்பது ஒரு நாடோடித்தவம்...எனத் தொடங்கி ஐந்து பிரிவுகளாக கவிதையை கவிதை என்றால் என்ன அதன் குணமென்ன என எளிய வார்த்தைகளைக் கொண்டு அம்பேத்காரியத்தை தொடுகிறார் வே.அருள்

*ச.விசயலட்சுமியின் கவிதைகள் மீராவின் கவிதைகள்+கற்பனைகள்= காகிதங்கள் என்கிற கவிதைத் தொகுதியில் வருவதைப் போன்ற எளிமையான வரிகளின் காத்திரம் மிளிர்வதைக் காணலாம். 

*பெண்ணடிமை அழுக்கிற்கு கல்வியின்மை காராணமாம் எனக் கேள்வி எழுப்பும் கவியாளர் அன்றாடப் பிழைப்பிற்கே வழியில்லாதவனிடம் சாதி எப்படி நிலை கொண்டது என்கிற கேள்வியை எழுப்புகிறார் நாகேந்தர பாரதி.

*ஒரு நாள் முதல்வர் முதல்வன் திரைப்படம் போல ஒரு ஓட்டுத் தேவைக்கு எங்களை அணுகவும் என்கிற காத்திரச் சொல் மூலம்  அமைந்திருக்கிறது பரிவை சே.குமார் அவர்களின் விமர்சனம்.

*சில புத்தகங்களை எழுதியவர்களுக்காகவே வாசிக்க வேண்டும் போல் இருப்பதில்லை. நம் கண் முன்னாலே அநியாயங்கள் பல செய்து, காறித்துப்ப வேண்டும் போல இருப்பவர்களின் – புத்தகங்கள் என்ன கனதியாக இருப்பினும் வாசிக்க வேண்டும் போல இருப்பதில்லை.

தொடர்வோம்...

Sunday, April 11, 2021

தமிழ்ச்சரம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்- April 11, 2021

தேர்ந்தெடுத்த படைப்புகள்:

அகத்தீ, 2021 ஏப்ரல், 8,  வெறும் பயணக் கதை அல்ல

மலாக்கா முத்துக்கிருஷ்ணன், 2021 ஏப்ரல், 11, இனிலா ரேடியோ மலேசியா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன், 2021 ஏப்ரல், 09, கெலிங் சொல்லுக்கு அனுமதி இல்லை

ஏன் தேர்ந்தேடுத்தேன் ?  -தமிழ்த்தேசன் இமயக்காப்பியன் 

வணக்கம்,

'வெறும் பயணக்கதை அல்ல' என்கிற நூல் விமர்சனப் பதிவை வாசித்த போது முழு நூலையும் வாசித்த உணர்வு உள்ளதாகவே நினைக்கிறேன். காஸ்ட்ரோ, குவேராவின் முன்னோடியான கொசே மார்த்தியின் எழுத்துகளும் நமக்கு பயன்படுபவையே. வால்காவிலிருந்து கங்கை வரை நூலைப் படைத்த ராகுல் பெருமகனின் எழுத்துகளும் பயண நூல்களின் வரிசையில் போற்றப்பட வேண்டிய நூற்கள்

 அதுபோல பயண நூற்களில் நடைபயண அனுபவங்களின் சேதிகள் நம்மையும் நடக்கச் சோல்லும். பூம்புகாரின் கண்ணகி காப்பிய நினைவு பண்டபம் அமைக்கப்பட்டதின் பின் ஒரு மனிதன் தன் வாழ் நாளெல்லாம் கண்ணகியை கண்டுபிடிக்க நடந்தவை.

பேராசிரியர் சி.கோவிந்தராசனார்

கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்து, இவ்வுலகிற்கு அறிவித்தப் பெருமைக்கு உரியவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களாவார்.

கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியே பயணித்து, பதினேழு ஆண்டுகள் நடந்து, கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்த ஆய்வாளர் இவர்.

கல்லூரிப் பணி  
 

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.

காவிரிப் பூம்பட்டிணம்

சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதன் பயனால், 1945 ஆம் ஆண்டு, மயிலாடுதுறை என்று, இன்று அழைக்கப்பெறுகின்ற, மாயுரம் சென்றார்.

மாயுரம் முழுதும் வாடகை மிதிவண்டியில் சுற்றி வந்து, விசாரித்த போது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

 பலமுறை முயன்று, கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும், செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று அழைக்கப்பட்ட பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார்.

அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததைக் கண்டார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்த முழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார்.

கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணாம்புக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து தந்தனர்.

இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும், நிலப் பரப்பே காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

கோவலன் திடல்    

 1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கி, கால் நடையாகவே ஆராய்ந்தவாறு, நடந்த மதுரை வரை செல்வதற்கே, பன்னிரெண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.

திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில், பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.

கண்ணகி கோயில்

பிறகு மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.

வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதைக் கண்டு கொண்டார்.


சிலப்பதிகார வழிகளின் படி, மதுரையில இருந்து, வையை ஆற்றின் தென் கரையை பின் பற்றி நடந்தார். சுமார் 40 மைலகளுக்கும் மேல் பயணித்த, சுருளி மலைத் தொடரை அடைந்தார்.

மேல் சுருளி மலையை அடைந்து ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதிசெய்தார். சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னு ம்பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும், அருவியின் பெயரால் சுருளிமலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

சுருளி மலை த்தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

வர்ஷ நாட்டின் மலை அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தேற்கே உள்ள கோயிலில் கல் வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்தார்.

கி.பி.14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூசைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.

கண்ணகிக்கு அடைக்கலம் தந்த பொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை, கவுந்தி அடிகள், இடையர் குல மகளான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள், மங்கல தேவி மலையின் மேற்பரப்பிற்குச் சென்றார். கோரைப் புற்காடு எட்டடி உயரத்தற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது.

 200  அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில் மதிற்சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது.




செடி கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன.  இக்கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்தது.

 கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகானப் படிக்கட்டு. அதற்கு முன்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டு குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில், கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.

சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்த இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள். மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலத காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை. அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுபுற மார்பு சிறிதாக இருந்தது.

பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

இவ்வாறாக பதினேழு ஆண்டு கால அயரா உழைப்பிற்குப் பின், தேடலுக்குப் பின், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகி சிலையினையும், கண்ணகி கோயிலையும் கண்டு பிடித்தார்.

கண்ணகி கோயிலை உலகிற்கு அறிவித்தல்

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், முதல் முதலில் கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றிய செய்தியை உலகிற்குத் தெரியப் படுத்தினார்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்பு பற்றி, சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார்.

அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், இளங்கோவடிகள் சிலைத்திறப்பு விழாவின்போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.


குடியரசுத் தலைவர் விருது

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் பணியினைப் போற்றும் வகையில், குடியரசுத் தலைவர் அவர்கள், 2013 ஆம் ஆண்டு தொல்காப்பியர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.



மறைவு

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தனது 94ஆம் வயதில்,  21.2.2015 அன்று இயற்கை எய்தினார்.

'மின்னல் வானொலி ' என்கிற பதிவை வாசிக்கிற போது அது படிக்காதவர்களின் புத்தகம் என்கிற கற்சொல் தான் என் ஞாபகத்திற்கு வந்தது. 


இன்று அனைவரின் கைகளிலும்(ஒருவருக்கு மூன்று கூட உண்டு)திறன்பேசி என்கிற கைத்தொலைக்காட்சி பரவிக் கிடக்கிறது. அதில் பாடல்களை பதிந்து கேட்பது இன்று நடக்கிறது. டூரிங் டாக்கிஸ் என்கிற பெயரில் பல பன்பலைகளில் திரைப்பட கதை வசனங்களை ஒலிபரப்புவது இன்றும் நடக்கிறது. தொலைவுப் பேருந்துகளில் தொலைக்காட்சியை அப்புறப்படுத்தி விட்டு அவ்விடத்தை மறுபடியும் வானொலி கைப்பற்றிக் கொண்டதை நாம் மகிழ்வுடன் வரவேற்றுள்ளோம். போர்க்காலங்காலங்களில் சேதி கேட்க துவியைப் பயன்படுத்தி வானொலி கேட்ட கதையை அக்கால போர்த்தளிர்களிடமும் அகதித் தளிர்களிடமும் கேட்கலாம். விடுதலைப் போராட்ட வரலாற்றில் வானொலிக் குரலாகவும் காட்சிக் குரலாகவும்  ஒலித்த எங்கள் தாய் இசைப்பிரியாவின் குரல் காற்று தமிழீழமென்றே உச்சரிக்கும் என்கிற சேரனின் வலிமை வரியைப் போல என்றும் இசையருவியின் குரல் ஒலிக்கும் எங்கள் செவிகளில்.

வானொலியின் மற்றொரு பெயர் சிலோன் என்கிற அளவிற்கு சிலோன் வானொலி நம் நெஞ்சங்களில் நிறைந்தவை. பீகாரில் ஒரு தனி நபர் எந்த அரசின் அனுமதியின்றியும் ஒரு வானொலி நிலையத்தை அமைத்தார். பிறகு அதை அரசப்படைகள் இவ்லாமல் செய்தனர். அந்தளவுக்கு வானொலிக் காதல் நம் அனைவருக்கும் உண்டு. வானொலி ஓடும் வீடு நாம் தேடும் நபர் வீடு என இப்படி என்னைக் கைது செய்த கதை உண்டு. இந்திய விடுதலை/வியத்நாம் விடுதலை(ட்ராய்) மலேசிய விடுதலை(கணபதி) ஆகியவற்றில் வானொலியின் பங்கு என தேடினால் நிறையக் கதைகள். அரியலூர் மாங்காய் பிள்ளையார் கோவில் தெரு அருகில் கண்ணன் துணியகக் கடை அருகில் ஒரு பெண் மருத்துவரின் பெயர் வானொலி. அவ்வூரின் குடந்தை எல்லையில் தென்கச்சி என்கிற ஊரில் யார் வானொலி பிரபலம் என நான் சொல்ல வேண்டியதில்லை. ஆம்! நம் காலத்தின் கதை சொல்லி தென்கச்சி சுவாமிநாதனே அவர். மற்றொரு நபர் பூர்ணம் விஸ்வநாதன்.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா வானொலியின்  தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு

இனிய உதயம் நேர்காணலில் தென்கச்சியாரிடம் வாசகர்கள் கண்கலங்குமாறு ஒரு கதை சொல்லுங்கள் என்ற போது *ஈழத்தமிழர்கள் என்கிற ஒற்றைச் சொல்லோடு தனது நேர்காணலை முடித்துக் கொண்டார். இனிமேல் இப்படி ஒரு பதிலை யாராலும் சொல்ல முடியாது. தேடலின் கதைக்காரர்கள் என்றும் அசௌரியமான பதிலைச் சொல்ல மாட்டார்கள் என்பதற்கு தென்கச்சியாரின் இப்பதிலே உதாரணம்.. மின்னல் பவள விழாவில் நாம் நூற்றாண்டு விழா கொண்டாடவும் வாழ்த்துவோம்.

 மீண்டும் அடுத்த  பதிவில் சந்திப்போம். நன்றியும் நல்வணக்கமும்

-தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

Friday, April 9, 2021

கவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை (சூன் 2) ஒட்டி கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விசய், உலகு தழுவிய தமிழ்க் குறும்பா நூல்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார்.

 


    இந்தப் போட்டிக்கு 2018, 2019, 2020 – ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான உங்களுடைய நூல்களின் 3 படிகளை வரும் மே-20-க்குள் அவர்களுக்குக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

    தேவைக்கேற்ப அச்சு(POD) எனப்படும் ஒளிப்படி நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் போட்டியில் ஏற்கப்பட மாட்டா.

    ஒரு கவிஞரே எத்தனை நூல்களை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம்.

முதல் பரிசு உரூ. 10 ஆயிரம் – இரண்டாம் பரிசு உரூ. 5 ஆயிரம் – மூன்றாம் பரிசு உரூ. 3 ஆயிரம் – நான்கு    நூல்களுக்கு ஆறுதல் பரிசு உ ரூ.1000 வீதம்.

     ஆரணியில் வரும் சூன் மாதத்தில் நடைபெறவுள்ள கவி.விசய்-யின் குறும்பா நூல்கள் வெளியீட்டு விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

    நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி : அகநி வெளியீடு, எண்: 3, பாடசாலை வீதி,  அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408, திருவண்ணாமலை மாவட்டம்.

    தமிழகத்தின் மூத்த குறும்பா கவிஞர்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான நூல்களைத்   தேர்வு செய்வர்.

    கூடுதல் விவரங்களைப் பெற அழையுங்கள் : 96004 56606

வெளியீடு- http://thiru2050.blogspot.com/2021/04/2021.html